Skip to main content

“சூர்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது” - உயர்நீதிமன்றம் அதிரடி

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

chennai high court new order surya jaibhim case

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இருப்பினும் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர்  த.செ. ஞானவேல் இருவரும், "குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும்  எண்ணத்தில் படம் எடுக்கவில்லை" என விளக்கமளித்தனர். இருப்பினும் பாமக தரப்பு ஜெய் பீம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 

 

இதனிடையே ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி படக்குழுவினர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு நடிகர் சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து சூர்யா மற்றும் இயக்குநர் த.செ ஞானவேல் ஆகியோர் தரப்பிலிருந்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்கு தடை செய்ய வேண்டும், தங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ ஞானவேல் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு குறித்து புகார்தாரர் மற்றும் காவல்துறையினர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் இந்த வழக்கை ஜூலை 21 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்