Skip to main content

உதயநிதி படத்திற்கு பேனர் வைத்த காவலர்; அதிரடியாக பாய்ந்த வழக்கு 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

case filed against police man kathiravan udhayanidhi stalin nenjukku needhi banner

 

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தைத் தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று(20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. 

 

இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களும், திமுகவினரும் போஸ்டர் மற்றும் பேனர்களை வைத்தனர். இதே போன்று பெரம்பலூர் பழக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்திருந்தார். இதனைப்பார்த்த பலரும் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடலாமா என்று விமர்சங்களை வைத்தனர். இதனிடையே பெரம்பலூர் காவல்துறை கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் பேனர் வைத்ததால் அவர் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டப்பிரிவு 4 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.