Skip to main content

ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

தமிழ் திரைப்பட உலகில் யூ-ட்யூப் விமர்சனம் என்பது கடந்த 8,9 ஆண்டுகளுக்கு முன்பு மெல்ல ஆரம்பித்து, வளர்ந்து தற்போது தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிவிட்டது. லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களின் எண்ணத்தை ஊடுருவக்கூடிய பாதிக்கக்கூடியவர்களாக யூ-ட்யூப் விமர்சகர்கள் உருவாகியுள்ளனர். இவர்களில் தனி நபர்களாக சேனல் ஆரம்பித்து பிரபலமானவர்கள் 'ப்ளூசட்டை' மாறன் மற்றும் பிரஷாந்த். 
 

blue sattai maran

 

 

'ப்ளூசட்டை' மாறன், தனது காட்டமான விமர்சனங்களுக்குப் புகழ் பெற்றவர். மதுரை பேச்சு வழக்கில், இயல்பாக, படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வெளியே நின்று பேசும் ஒரு சாதாரண ரசிகனின் மனநிலையில் பேசும் இவரது ஸ்டைல் சினிமா ரசிகர்களை முதலில் கவர்ந்தது. 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை இவர் விமர்சித்த விதம் திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதை எஞ்சாய் செய்தாலும் பின்னர் 'விவேகம்' படத்தை இவர் விமர்சித்த விதம் ரசிகர்களையும் கொதிப்படையச் செய்தது. படத்தைத் தாண்டி அஜித்தை விமர்சித்ததால் பல இயக்குனர்கள் இவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர், ரசிகர்கள் இவரை சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்தனர். இதெல்லாம் இவருக்கு புகழ் வகையிலும் வியூஸ் கணக்கிலும் லாபமாகவே அமைந்தது. அதுவரை இல்லாத அளவில் 'விவேகம்' படத்தின் விமர்சனம் பரவியது. பின்னர் வந்த பெரிய நடிகர்களின் படங்களை எல்லாம் அதே ரீதியில் விமர்சித்தார் மாறன். 
 

ஒவ்வொரு படத்தையும் இவர் எப்படி திட்டுகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே பலர் இவரது விமர்சனத்தைப் பார்க்கின்றனர். பலர் "இவ்வளவு பேசுறீங்களே நீங்க ஒரு படம் எடுங்க பாப்போம்" என்று நாகரீகமாகவும் அநாகரீகமாகவும் இவரிடம் சவாலும் விட்டுள்ளனர். இவர் திரைத்துறையில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்ததாகவும் அதில் வெற்றி பெற முடியாத விரக்தியில் எல்லாப் படங்களையும் திட்டுகிறார் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் பல சிறிய படங்களைப் பாராட்டி ரசிகர்களிடம் கொண்டு சென்றதும் உண்டு.  

 

 

இவர் திரைத்துறையில் பணிபுரிந்தவர்தான். ஒரு படத்தை இயக்கவேண்டுமென்பது இவரது லட்சியமும் கூட. கடந்த ஆண்டே ஒரு படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டு பின் அது தள்ளிப்போனது, அதுகுறித்த செய்திகள் எதுவும் வராமல் இருந்தது. தற்போது ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று அறிவித்துள்ளார். இப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு புகைப்படங்களை மின்னஞ்சல் செய்யலாம் என்றும்  மே 13 முதல் தங்களை நேரில் சந்திக்கலாம் என்றும் அறிவித்துள்ளார் மாறன். 
 

'தவம்' படத்தில் ஒரு காமெடி காட்சியில் குதிரையில் வரும் வடிவேலுவுக்காக மக்கள் காத்திருப்பது போல 'ப்ளூசட்டை' மாறன் இயக்கும் படத்துக்காக பலர் காத்திருக்கின்றனர். நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெறும் நல்ல படமாக உருவாக வாழ்த்தலாம். 

 

 

சார்ந்த செய்திகள்