பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் ‘புதிய மனிதா...’ (எந்திரன்), ‘காயம்...’ (இரவின் நிழல்), ‘சின்னஞ்சிறு...’ (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார். இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ‘மின்மினி’ திரைப்படத்தில் இசையமைப்பாளராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை 'ஆங்கர் பே ஸ்டுடியோஸ்' தயாரித்திருக்க எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நாளை (09.08.2024) வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினருடன் ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டார். அதன் பிறகு தன் மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. தனது மகள் இசை குறித்த கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், “என்னுடைய மகளின் முதல் படம் இது. சிறந்த முறையில் இசையமைத்துள்ளார். அப்பா என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. மேம்பட்ட ஒரு இசையாக உள்ளது. கதிஜாவுடைய எந்த செய்தி வந்தாலும் நிறைய பேர் அவரை விமர்சனம் செய்துள்ளனர். அதற்கெல்லாம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அவரை நினைத்து பெருமையாகவுள்ளது. கடவுள் அவருக்கு இன்னும் அதிகமான வெற்றியைத் தரவேண்டும்” என்றார்.
‘ரோஜா’ படத்தில் உங்கள் பெயர் வந்த போதும், இப்போது உங்கள் மகள் பெயர் திரையில் வரும்போது ஏற்பட்ட உணர்வு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “கண்டிப்பாக சந்தோஷமாகவுள்ளது. ஏனென்றால் கதிஜாவின் செயல்பாடுகளை 10 வருஷாக பார்த்து வருகிறேன். முதலில் இசை ரீதியான செயல்பாடுகளில் இருந்தார். அதன் பிறகு அதை கைவிட்டுவிட்டார். பின்பு அவருக்கு லாக் டவுண் சமயத்தில் இசை சம்பந்தமான சில பாடங்களைக் கற்றுக் கொடுத்தோம். அதன் பிறகு அவருக்கு இசையமைக்கும் நம்பிக்கை வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த படக்குழு கிடைத்தது அவரின் அதிர்ஷ்டம்தான். ஏனென்றால் இந்த படக்குழுவுடன் இணைந்து கதிஜா பணியாற்றும்போது அவருடைய திறமை மேலும் நிறைவானதாக அமைந்துள்ளது” என்றார். அப்போது அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கதீஜா கண்கலங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.