நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் தமிழ் இசையுலகில் வெற்றிகரமாகக் கோலோச்சி வரும் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரையும் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்.
அப்போது அனிதா குப்புசாமி பேசியதாவது “எந்த ஒரு பாடலையுமே சரியான முறையில் நாம் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தவறான அர்த்தம் கொண்ட பாடல்களைப் பாடுவதில்லை என்கிற கொள்கை எங்களுக்கு இருக்கிறது. இப்போதிருப்பவர்கள் நாம் சொல்லும் எந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இவர் மீது ஒரு நெகட்டிவ் இமேஜ் விழுந்துவிட்டது. தற்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களுக்கு இளம் பாடகர்களிடம் வேலை வாங்குவது எளிதாக உள்ளது. பெரிய ஜாம்பவான்கள் பலர் தற்போது பாடாமல் இருக்கின்றனர். சொல்ல மறந்த கதை படத்தில் ஒரு நடிகராகவும் அவர் பெயர் பெற்றார். முதலில் அவர் நடிப்பதை நான் எதிர்த்தேன். அதன்பிறகு ஏற்றுக்கொண்டேன்”.
எங்கள் வீட்டில் புதிய டெக்னாலஜியோடு கூடிய பொருட்கள் அனைத்தும் இருக்கும். அவை நம்முடைய வேலைகளை எளிமையாக்குகின்றன. நான் கேட்கும் அனைத்து மாற்றங்களையும் அவர் உடனே செய்து தருவார். வாஸ்து போன்ற விஷயங்களும் அவருக்கு அத்துப்படி. 25 வயதுக்குப் பிறகு தான் அவர் இசை கற்றுக்கொண்டார். ஆனால் குறைந்த காலத்தில் அவருடைய இசைஞானம் வளர்ந்ததற்கு அவருடைய கடினமான உழைப்பு தான் காரணம். என்னுடைய கணவருக்கு உலகமே நான் தான். என்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மாட்டார். சமையல் செய்து கொடுக்கச் சொல்லி எப்போதும் கேட்டதில்லை. அவர்தான் எனக்கு சமைத்துக் கொடுப்பார். சமூக வலைதளங்களில் தற்போது அனைவரையும் பற்றித் தவறாகப் பேசுகின்றனர். என்னுடைய நிறத்தை, சாதியை விமர்சிக்கின்றனர்.
இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் அதிகம் எதிர்கொண்டிருக்கிறோம். ஒரு மனைவிக்கு கணவனையும், கணவனுக்கு மனைவியையும் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். இதில் இவர்கள் யார் கருத்து சொல்ல? எங்கள் இருவரையும் பிரிக்க பலர் முயற்சி செய்தனர். வெறும் அனிதா என்றால் என்னை யாருக்கும் தெரியாது. அனிதா குப்புசாமி என்றால் தான் தெரியும். அந்தப் பெருமையைக் கொடுத்தது அவர்தான். நாங்கள் இந்த நிலைக்கு வந்ததற்கு எங்களுடைய உழைப்புதான் காரணம். எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.”