Skip to main content

“ஒரு பக்கம் மட்டும் பார்க்கக் கூடாது... ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு” - கலாஷேத்ரா விவகாரம் குறித்து அபிராமி

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

actress Abhirami Venkatachalam about Kalakshetra college issue

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் பரவலாகப் பேசப்பட, இந்தப் புகார் தொடர்பாக அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது போலீசார், மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி லத்திகா சரண் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அபிராமி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன். நானும் கலாஷேத்திரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். எனக்கு இந்த விவகாரத்தில் பேச விருப்பமில்லை. ஏனென்றால் எப்போதுமே பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டுமே பார்க்கக் கூடாது. நிறைய பேர் அதை மட்டுமே பார்த்து கருத்து சொல்கிறார்கள். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை. ஆனால் இப்போது யார் யாரோ கலாஷேத்திரா எப்படி இருக்கும் என என்னிடம் கேட்கிறார்கள். கலாஷேத்திரா என்ற பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், கல்லூரியை பற்றி தவறாக சொல்கிறார்கள். அது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. நான் ஒரு முன்னாள் மாணவியாக சொல்கிறேன். கலாஷேத்திரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

என்ன நடக்கிறது என்று எங்களுக்கே ஒன்னும் புரியவில்லை. ஒரு பக்கத்தின் பார்வையை மட்டுமே வைத்து இவர்கள் இப்படித்தான் என்ற முடிவுக்கு எப்படித்தான் உறுதியாக வருகிறார்கள் என்று புரியவில்லை. நான் கல்லூரியின் இயக்குநர் ரேவதி மேடம் பக்கம்தான் நிற்பேன். அவர்கள் சமீபத்தில் தான் இயக்குநராக பொறுப்பேற்றவர். இந்த பிரச்சனை 10 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது என எல்லாரும் சொல்கிறார்கள். அப்போது ரேவதி இயக்குநர் கிடையாது. இப்போது எல்லா பிரச்சனைக்கும் ரேவதியை குற்றம் சாட்டுகிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று நிறைய கேள்விகள் இருக்கிறது. அந்த ஆசிரியருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்பதை அறிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் தெரியும். சொல்லப் போனால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கு. மனைவி மற்றும் ஒரு பொண்ணும் இருக்கு. அவங்க பற்றி யாருமே நினைக்கவில்லை. நிறைய இடத்தில் நாங்க பெருமையாக பார்த்த ஆசிரியர்களை ரொம்ப இழிவுபடுத்தி பேசியிருக்காங்க. பல நல்ல விஷயங்களுக்கு சென்றுகொண்டிருந்த கல்லூரி இது. எந்த துன்புறுத்தலாக இருந்தாலும் நடந்த நேரத்திலேயே வெளிப்படையாகப் பேச வேண்டும்.

 

ஒரு தவறு நடக்கிறது என்றால் அதை அந்த இடத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த இடத்தை கடந்து வந்துவிட்டு, நான் பயந்துட்டேன்; எங்க போய் சொல்லவேண்டும் என்று தெரியல என சொல்லக்கூடாது. நமக்கு சப்போர்ட் பண்ண ஆள் இல்லாமல் இருப்பதற்கும் அல்லது நம்ம அப்பா அம்மாவே நம்மளை கேள்வி கேப்பார்களோ என்று யோசிக்க இது 1980ஸ் காலகட்டம் கிடையாது. உங்களுக்கு எல்லா சப்போர்ட்டும் இருக்கு. நமக்கு நடக்கிற விஷயத்தை தைரியமாக சொல்வது என்பதுதான் முக்கியம். அது உண்மையாகவும் இருக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. இங்கு அதுதான் பிரச்சனை. இங்கு நிறைய விஷயங்களை மறைச்சி நமக்கு சாதகமாக பேச வேண்டும் என்று மாத்தி மாத்தி பேசுவதனால் தான் நிறைய பிரச்சனை உருவாகிறது. நம்ம பக்கம் உண்மை இருந்தால் நம்ம மாநிலம் கண்டிப்பாக அதை பார்க்கும். கண்டிப்பா அதை நிராகரிக்க மாட்டார்கள்" என்றார். 

 

பெண்களின் கைகளை கூட அவர்களின் அனுமதி இல்லாமல் தொட்டால்... அதுவும் குற்றமே என அஜித் பேசிய வசனம் இடம்பெற்ற 'நேர்கொண்ட பார்வை' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் அபிராமி. அந்த படத்தில் அஜித் பேசிய 'நோ என்றால் நோ' என்ற பெண்களுக்கு ஆதரவான வசனம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்