Skip to main content

நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ‘ட்ராமா’ படத்தின் இசை வெளியீடு!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

Actor Vivek Prasanna will hero trauma movie music released 

டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க, ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ராதாரவி பேசுகையில், ''எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்பந்தமில்லை. இருக்கும் ஒரே சம்பந்தம் இயக்குநர் தம்பிதுரை. அவர் இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக என்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தாருங்கள் என அழைப்பு விடுத்தார். நான் இங்கு வருகை தராமல் இருந்திருந்தால் ஒரு நல்ல விஷயத்தை தவறவிட்டிருப்பேன். நம் மக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது படத்தை திரையரங்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் மூலமாக படத்தைப் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் ஒன்றைத் தான் சொல்ல விரும்புகிறேன். இது தமிழர்களின் படம். தமிழர்களாகிய நீங்கள் தான் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர்களுக்கு அடையாளம் என்பது முக்கியம். தற்போது கூட என் தந்தையார் எம்.ஆர். ராதாவை பற்றி பல விஷயங்களை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரியோ தவறோ பேசுகிறார்கள். நமக்கு மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கொடுப்போம். சினிமாக்காரர்கள் யாரும் தரக்குறைவானவர்கள் அல்ல. இயக்குநரை பற்றி மற்றவர்கள் அனைவரும் பேசும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமாகி 51 வருடங்கள் ஆகின்றன. நான் நடிப்பதற்கு மட்டும் தான் லாயக்கு, என் சகோதரர் கமல் ஹாசனை போல் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எனக்கு ஏகப்பட்ட 'வெளி' வேலைகள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளுக்குள் இருக்கிறது.

இங்கு படத்தின் மூலம் டிஸ்ட்ரிபியூட்டர் கூட அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இனி சிறந்த எதிர்காலம் உண்டு. இந்தப் படத்தின் பெயர் 'ட்ராமா'. ஆனால் இந்தப் படத்தை பார்ப்பவர்களை ட்ராமாவில் விடாது. தற்போது சினிமா எடுப்பதும் எளிது, சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம். பொதுவாக படத்தை வெளியிடுவது தான் எளிதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதுதான் கடினமானதாக இருக்கிறது. தற்போது படத்தை வெளியிடுவதற்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. முன்பெல்லாம் 25வது நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள்  என்று படம் வெற்றி பெறும். ஆனால் தற்போது படம் வெளியாகி மூன்றாவது நாளிலேயே 'வெற்றிகரமான மூன்றாவது நாள் ' என போஸ்டர் வெளியிடப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடினால் தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. குறைந்தபட்சம் பத்து நாட்களாவது இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார். 

சார்ந்த செய்திகள்