
நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பலரும் நேரில் சென்றோ அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்டோ ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். காஷ்மீரில் லியோ பட படப்பிடிப்பில் இருந்த விஜய் நேற்று இரவு சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ட்விட்டர் பக்கம் வாயிலாக நடிகர் சிம்பு, "அஜித் சார் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பலத்தை தரட்டும்" எனப் பதிவிட்டுள்ளார். சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.