Skip to main content

கண்ணதாசன் கொடுத்த சாபம்... சிறிது நேரத்தில் தீப்பிடித்து எறிந்த ஸ்டூடியோ!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

rajesh

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். பல இடங்களில் கவிஞர் கண்ணதாசனை ‘தெய்வீகக் கவிஞர்’ எனக் குறிப்பிட்டுவரும் நடிகர் ராஜேஷ், அதற்கான காரணத்தை முதல்முறையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு...

 

கவியரசர் கண்ணதாசன் அவர்களை நான் ‘தெய்வீகக் கவிஞர்’ என்றுதான் குறிப்பிடுவேன். அதற்கான காரணத்தை இந்தப் பகுதியில் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு ஸ்டூடியோ உரிமையாளருக்கும் கண்ணதாசனுக்கும் பாடல் எழுதுவதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அந்த ஸ்டூடியோ உரிமையாளர் கண்ணதாசனிடம் நாகரிகமாக நடந்துகொள்ளாமல் மனம் புண்படும்படி நடந்துகொண்டார். அந்த ஸ்டூடியோவில் இருந்து கிளம்பும்போது, 'உன் ஸ்டூடியோ தீப்பிடிச்சுதான்டா எரியும்' என மனதிற்குள் சாபமிட்டுக்கொண்டே கண்ணதாசன் வந்துவிட்டார். அவர் வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்துவிட்டது என கண்ணதாசனுக்கு ஃபோன் வந்துள்ளது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கண்ணதாசன், ‘ஐயோ... நாம் அப்படி நினைத்திருக்கக்கூடாது’ என நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். 

 

தனிப்பட்ட முறையில் கண்ணதாசன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 1965இல் அழகப்பா கலைக்கல்லூரியில் கண்ணதாசனின் பேச்சை நேரில் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சமயத்தில் திமுக ஆட்சிக்கு வரவில்லை. அந்த விழாவில் திமுகவைச் சேர்ந்த கவிஞர் ஒருவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. திமுகவைச் சேர்ந்த அந்தக் கவிஞர் மேடையில் பேசப்பேச அதைக் கண்ணதாசன் கவிதையாகச் சொல்ல வேண்டும். இதுதான் போட்டி. ஏ4 காகிதம் ஒரு பண்டல் அளவிற்கு கொண்டு வந்து கண்ணதாசன் அருகில் வைத்துவிடுகின்றனர். அவர் மேடையில் பேசப்பேச இவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் திமுகவைச் சேர்ந்த அந்தக் கவிஞர் மேடையில் பேசமுடியாமல் நிறுத்திவிட்டார். அந்த அளவிற்கு குறுகிய நேரத்திலேயே நிறைய கவிதைகள் எழுதும் ஆற்றல் கொண்டவராக கண்ணதாசன் இருந்தார். கண்ணதாசன் எழுத உட்கார்ந்துவிட்டால் நயகரா அருவிபோல கவிதை கொட்டும் என்பார்கள். ஏ.வி.எம்மில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, மூத்தவர் முருகன் பல்லவி சரியில்லை என கண்ணதாசனிடம் குறை கூறிக்கொண்டே இருந்துள்ளார். கண்ணதாசன் திருத்தம் செய்து கொடுத்தாலும் அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறிக்கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடுப்பான கண்ணதாசன், 25 பல்லவிகள் எழுதி, தேவையானதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என முருகனிடம் கொடுத்துவிட்டு சென்றதாகக் கூறுவார்கள். அப்படி உருவான 'அருகில் வந்தாள் உருகி நின்றாள்...' என்ற பாடல், முழுவதும் பல்லவி வடிவில்தான் இருக்கும்.

 

சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் உருவான ‘மகாதேவி’ என்ற படத்தில் விஸ்வநாத் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற  'கண் மூடும் வேளையிலும்...' என்ற பாடலுக்கு கண்ணதாசன் வரிகள் எழுதியிருப்பார். அந்தப் பாட்டின் வரிகள் மிக அற்புதமாக இருக்கும். 'கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே... கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே' என எம்.ஜி.ஆர் சாவித்ரியைப் பார்த்துக் கூறுவார். அதற்கு சாவித்ரி, 'கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே... கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே...' என எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறுவார். அதற்கு அடுத்த வரியில் 'மின்னாமல் முனங்காமல் வருகின்ற மழைபோல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே' என எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சாவித்ரி கேட்பார். அதுயென்ன, மின்னாமல் முனங்காமல் வருகின்ற மழைபோல? இந்தக் கற்பனையே அதீத கற்பனையாக இருக்கிறதே என ஒரு பேட்டியில் கண்ணதாசனின் இந்த வரிகளைக் கிண்டல் செய்தேன். 

 

அந்தப் பேட்டி முடிந்ததும் என்னுடைய மகளுக்கு ஃபோன் செய்தேன். அமெரிக்காவில் இருந்த அவர், தற்போது கணவருடன் தஞ்சாவூரில் வசித்துவருகிறார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு உப்புக்கண்டம் காயப்போட்டு எடுத்தாச்சா எனக் கேட்டேன். அவர்கள் பகுதியில் கனமழை பெய்த விஷயத்தை அவர் என்னிடம் கூறினார். மழை வருமென்றால் காற்று வீசியிருக்கும், மின்னல் வெட்டியிருக்கும்... அதையெல்லாம் பார்த்துக் காயப்போட்டதை எடுத்திருக்க வேண்டாமா எனக் கேட்டேன். அவர் உடனே, எந்த அறிகுறியும் இல்லாமல் மழை வந்ததாகக் கூறினார். 'மின்னாமல் முனங்காமல் வருகின்ற மழைபோல...' என்ற கண்ணதாசனின் வரியைக் கிண்டல் செய்து ஒருமணி நேரம்கூட தாண்டவில்லை. அதற்குள் அந்த வரியின் அர்த்தத்தை இயற்கை எனக்குப் புரியவைத்தது. அதனால்தான் கூறுகிறேன், கண்ணதாசன் ஒரு தெய்வீகக் கவிஞரென்று.

 

    

சார்ந்த செய்திகள்