Skip to main content

குறை சொல்லும் பெற்றோர்; குழந்தை தந்த தண்டனை - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :21

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 parenting-counselor-asha-bhagyaraj-advice-21

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு பெற்றோர் தனது மகளை என்னிடம் கூட்டி வந்திருந்தார்கள். தனது மகள் பொது இடத்தில சகஜமாக பேசமாட்டாள், யாரிடமும் சேர மறுக்கிறாள். எந்த வீடு மற்றும் விசேஷங்கள் சென்றாலும் உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். அவளிடம் அப்புறமாக நேரம் ஒதுக்கி மனதில் உள்ளதை பேசுமாறு அழைத்தால் கூட வந்து உட்காருவதில்லை என்றார்கள். அந்த சிறுமி தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள். நன்றாக பேசுவதை புரிந்து கொள்ளும் வயது தான் என்பதால் ஏன் இப்படி நடவடிக்கை இருக்கிறது என்று அந்த குழந்தையிடம் தனியாக பேசினேன்.

அந்த குழந்தை என்னிடம் ஆச்சரியப்படும் அளவிற்கு ஒன்றரை மணிநேரம் நிறுத்தாமல் நன்றாக பேசியது. புது ஆளிடம் பேசமாட்டாள் என்று அவளது பெற்றோர் கூறியது தவறென்று புரிந்தது. பின்னர் என்னதான் பிரச்சனை என்று பேசியதை வைத்து பார்த்தால்,  அவளது பெற்றோர் எப்போதுமே தனது தாத்தா, பாட்டி, சித்தி, மாமா என்று எல்லாரிடமும் இவளை பற்றி நன்றாக படிக்கமாட்டாள், ஒரு வேலையும் செய்ய மாட்டாள், குளிக்க மாட்டாள், செல்ப் கிளீன் செய்து கொள்ளமாட்டாள் என்று உறவினர் முதல் அவளது தோழிகள் வரை சொல்லி இருக்கிறார்கள். மேலும் அவளை கூட பிறந்தவரோடு வேறு கம்பேர் செய்திருக்கிறார்கள். எனக்கு என் பெற்றோரை பிடிக்கவே இல்லை என்றாள். அவர்கள் என்னை பற்றி உறவினர்களிடம் அப்படி பேசினார்கள் என்பதாலேயே தான் அவர்களும் அசிங்கப்பட வேண்டும் என்று நானும் அசிங்கப்படுத்துகிறேன் என்றாள். அவர்களிடம் சண்டை போட்டு இரண்டு மாதம் பேசவே இல்லை என்றாள்.

பொதுவாக தனக்கு பிடித்தவை, பிடிக்காதவை என்று நன்றாக மகிழ்ச்சியாக என்னுடன் பேசினாள். நான் இன்று குளிக்கவில்லை தான் ஆண்ட்டி ஆனால் உங்களை பார்க்க வருகிறேன் என்றதும் லிப்ஸ்டிக் போட்டிருக்கிறேன் என்று சொன்னாள். நாம் சுகாதாரம் பற்றி பேசவேண்டும் தான். ஆனால் மெல்ல மெல்ல எடுத்துச் சொல்ல வேண்டும்,  குறைகூறுவது என்று மட்டுமில்லாமல் அவ்வப்போது சிறு சிறு பாராட்டும் இருக்கவேண்டும். இந்த இடத்தில் நான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது அவளுக்கு இல்லை. அவளது பெற்றோருக்கே கொடுக்க வேண்டும் என்று புரிந்தது.

அவர்களை அழைத்து பேசினேன். தினமும் ஒரு இருபது நிமிடம் அவளை நன்றாக கவனித்து மனதிலிருந்து உண்மையாக பாராட்ட வேண்டும் என்று சொன்னேன். ஆனாலும் ஒரு மாதமாகியும் அவர்களிடம் அந்த சிறுமி சகஜமாக வரவில்லை. அந்த சிறுமிக்கு இவர்களிடம் சற்றும் நம்பிக்கை இல்லை. இது சரி வரவில்லை என்பதால், நான் என் முன்னே பேசுங்கள் என்று வாரம் ஒரு நாள் அட்டவணை போட்டு கொடுத்தேன். இதுவரை ஒரு நான்கு வாரங்கள் போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இப்போதெல்லாம் குறை சொல்வதில்லை தான், உறவினரிடமும் என்னை பற்றி பேசுவதில்லை தான், ஆனால் நான் இல்லாதபோது பேசுவார்களோ என்று சந்தேகிக்கிறாள். அவர்கள் உன் முன்னால் எப்படி பேசுகிறார்கள் என்பதை பார், நீ இல்லாதபோது என்ன பேசுகிறார்கள் என்று இப்போது யோசிக்க வேண்டாம் என்று சொன்னேன்.

அந்த சிறுமிக்கு பொதுவாக தன்னை அலங்கரித்து கொள்வது என்பது மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல அழகான சுருட்டை முடி, அவள் தன் தோழிகள் எல்லாரும் பாராட்டி இருப்பதாகவும், ஆனால் இவள் பெற்றோர் மட்டும் அவர்கள் முன்னாடி சென்று காண்பித்தாலும், தன்னை பாராட்டுவதில்லை என்றாள். எனக்கு  என்னை என் தோழிகள் கூட ரூமில் தங்க விட்டால் நன்றாக இருக்கும் என்றாள். நான் அவளது பெற்றோரிடம், உங்களிடம் நம்பிக்கை வரவேண்டும் என்றால் அவளுக்கு பிடித்த மேக்கப் விஷயத்தில் இருந்து கூட நீங்கள் அவளிடம் நெருங்கலாம். கவனித்து பாராட்டுங்கள், மேலும் அதற்கான வகுப்பில் சேர்த்து விடுங்கள் என்றேன். சில செஷன்கள் பிறகு இப்போது அவள் நான் இல்லாமல், அவளது பெற்றோருடன் பத்து நிமிடம் நேரம் செலவிடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறது. அவர்களும் தனது மகளை இப்போதெல்லாம் குறை சொல்வது இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். எனக்கு கொடுத்த வாக்கை அவர்கள் சரியாக காப்பாற்றி விட்டார்கள் என்றால் அவர்கள் குழந்தை அவர்களிடம் சரியாக நடந்து கொள்ளும்.