டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார் ஸ்மிரிதி மந்தானா.
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கியா சூப்பர் லீக் எனும் கவுண்டி போட்டியில், இந்தியாவில் இருந்து முதன்முறையாக தேர்வானார் ஸ்மிரிதி மந்தானா. 22 வயதாகும் இவர், வெஸ்டெர்ன் ஸ்டோர்ம் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். லோஃப்பரோ ஸ்டோர்ம் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் மழை குறுக்கிட்டதால், ஆறு ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்டெர்ன் ஸ்டோர்ம் அணியில் ஸ்மிரிதி மந்தானா வெறும் 18 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து உலக சாதனை படைத்தார். அவர் 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் குவித்தது.
இதற்கு முன்பாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி டெவின், இந்தியாவுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இதே சாதனை படைத்தார். குறிப்பாக, லோஃப்பரோ அணியில் சோஃபியும் இருந்திருக்கிறார். அவர் 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்தும், அந்த அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.