'என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை, கிரிக்கெட்டை விட்டு விலகவேண்டும்' என்ற என் எண்ணத்தை மாற்றியது என ரஷீத் கான் உருக்கமாகப் பேசியுள்ளார்.
13-ஆவது ஐ.பி.எல் தொடரின் 47-ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளரான ரஷீத் கான், நான்கு ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைபற்றினார். ரஷீத் கானின் சிக்கனமான பந்துவீச்சானது, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணியை மீள முடியாமல் செய்தது.
தன்னுடைய கடந்த கால கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசிய ரஷீத் கான், "முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் முதல்தர அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டேன். என்னுடைய சகோதரர், விளையாட்டை விடுத்துப் படிப்பில் கவனம் செலுத்தக் கூறி என்னைக் கண்டித்தார். நானும் கிரிக்கெட்டை விட்டுவிடலாம் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில் என்னுடன் ஃபோனில் பேசிய என் அம்மா, "உன் விருப்பப்படியே விளையாடு. முடிவைப் பற்றி கவலைப்படாதே, நாளை வெற்றி பெறாவிட்டால், இன்னொரு நாள் உனக்கு வெற்றி கிடைக்கும்" என்றார். நான் தொடர்ந்து விளையாடினேன். பின் உள்ளூர் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டினை வீழ்த்தினேன். அதன்பின் முதல்முறையாக 2015-ல் ஆஃப்கானிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது" எனக் கூறினார்.
ரஷீத் கான் தாயார் கடந்த ஜூன் மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.