பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான பீலே, கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர். மூன்று முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்துள்ள பீலேவை பிரேசில் மக்கள் 'கருப்பு முத்து' என்று அழைத்தனர்.
உடல்நலக்குறைவு காரணமாக கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பீலே, பொது நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு பீலேவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு பீலே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் அமர்ந்தே பங்கேற்றார். பீலேவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகியது.
பீலேவின் நிலைமை குறித்து அவரது ரசிகர்கள் கவலைப்பட்டு வரும் நிலையில், பீலேவின் மகன் எடின்கோ, "கால்பந்து உலகில் அசைக்கமுடியாத வீரராக இருந்த எனது தந்தை தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கிறார். பிறரின் துணையில்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. எனது தந்தையை இனி வெளியே பார்ப்பது கடினம்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது.