இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் அரை சதமும், டேனியல் லாரன்ஸ் 46 ரன்களும் அடித்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. ரோகித் ஒரு பக்கம் நிதானமாக ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தது. கில், விராட் கோலி ஆகியோர் டக் அவுட்டானார்கள். புஜாரா 17 ரன்களிலும், ரஹானே 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமாக ஆடிய ரோகித், 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய அஸ்வினும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இருப்பினும் ரிஷப் பந்தும், வாஷிங்டன் சுந்தரும் நேர்த்தியாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டிய ரிஷப் பந்த் சதமடித்து விளாசினார். பந்த் மற்றும் சுந்தர் இருவரால், இந்திய அணி முன்னிலை பெற்றது. அதிரடி காட்டிய பந்த், 101 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவரும் சுந்தர் 60 ரன்கள் எடுத்துக் களத்தில் உள்ளார்.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி, இங்கிலாந்தை விட 89 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது.