இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன்கில் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சிலும் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 21 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேற புஜாரா (1), ஜடேஜா (4), ஸ்ரேயாஸ் ஐயர் (0), கே.எஸ்.பரத் (17) என வேகமாக வெளியேறினர். ஒரு கட்டத்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 109 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும் சுப்மன் கில் 21 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஹுன்னாமன் 5 விக்கெட்களையும் நாதன் லியன் 3 விக்கெட்களையும் மர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸியின் தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும் உஸ்மான் கவாஜா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து லபுசானே மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்களை சேர்த்தனர். முதல் நாள் முடிவில் ஆஸி அணி 156 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. அதிகபட்சமாக கவாஜா 60 ரன்களையும் லபுசானே 31 ரன்களையும் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களையும் எடுத்திருந்தனர். களத்தில் கேமரூன் க்ரீன் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் இருந்தனர். ஆஸி கொடுத்த 4 விக்கெட்களையும் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸி அணி 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸி இன்னிங்ஸின் 4 ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். க்ரீஸில் லபுசானே ஆடிக்கொண்டு இருந்தார். அந்த ஓவரில் லபுசானே போல்ட் ஆனார். இந்திய அணியின் கட்டுக்குள் ஆட்டம் வந்தது என நினைக்கும் பொழுது, ஜடேஜா வீசிய பந்தை நோ பால் என நடுவர் அறிவித்தார். இதனால் விக்கெட்டில் இருந்து தப்பிய லபுசானே., கவாஜா உடன் இணைந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.