Skip to main content

இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவமாக அமைந்தது - கே.எல்.ராகுல் பேச்சு!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

kl rahul

 

 

நேற்றைய போட்டி இனிப்பும், கசப்பும் கலந்த அனுபவமாக இருந்தது என சூப்பர் ஓவர் தோல்வி குறித்து கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இடையேயான போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களைக் குவித்தது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டோன்னிஸ் 53 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களும் குவித்தனர். 

 

பின்னர் 158 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக மயங் அகர்வால் 60 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இரு அணிகளும் சமநிலை வகித்ததை அடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடைபெற்றது.

 

அதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, டெல்லி அணி வீரர் ரபடாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அவ்வணி சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, இரண்டாவது பந்திலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

 

சூப்பர் ஓவரில் ஏற்பட்ட தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேசும்போது, "இது இனிப்பும், கசப்பும் கலந்த ஒரு அனுபவமாக உள்ளது. ஆட்டத்தின் 10-வது ஓவரில், போட்டி சமநிலையில்தான் முடியும் என்று நீங்கள் கூறியிருந்தால் ஏற்றிருப்பேன். இது முதல் போட்டிதான். இதன்மூலம் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். மயங் அகர்வால் நம்ப முடியாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றியை நோக்கி அணியை அவர் அழைத்து வந்த விதம் அற்புதமாக இருந்தது" என்றார்.