இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த முழுநேர விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் பலரும் ரிஷப் பந்தை தோனியுடன் ஒப்பிட்டும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் பந்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார். ரிஷப் பந்த் குறித்து பேசிய அவர், "இந்திய ரசிகர்கள் தோனியை வேறு யாருடனும் ஒப்பீடு செய்யக் கூடாது. அவர் மிகப்பெரிய சாதனையாளர். ஒரு நாள் யாரேனும் ஒருவர் அந்த உச்சத்தை எட்டக்கூடும். ஆனால், அது அவ்வளவு எளிதில் நடக்க வாய்ப்பில்லை. ரிஷப் பண்ட் திறமை வாய்ந்த ஒரு இளம் வீரராக உள்ளார். ஆரம்பத்திலேயே அவர் மீது அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் அவர் தோனியைப் போல விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது. அதேபோல அவரும் தோனியின் கீப்பிங் ஸ்டைலை காப்பி அடிக்க வேண்டாம். அதேநேரம் தோனியிடம் இருந்து என்னவெல்லாம் முடியுமோ அதனையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தவரை விளையாடுங்கள்” என்று கூறியுள்ளார். கில்கிறிஸ்ட்டின் இந்த அறிவுரைக்கு இணையதளத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.