Skip to main content

ராகுல் குறித்த டிராவிட்டின் பதில்; ரசிகர்கள் அதிருப்தி

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Dravid's response to Rahul; Fans are unhappy

 

கே.எல்.ராகுல் குறித்து ராகுல் டிராவிட் அளித்த பதிலால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

டெல்லியில் அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க சிரமம் ஏதும் இன்றி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது. 

 

ஆயினும், இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. இரு டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து இந்திய அணியின் மூன்று இன்னிங்ஸ்களில் 38 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாகவே அவர் பெரிய இன்னிங்ஸ்களை ஆடாததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், கே.எல்.ராகுல் குறித்து தனது கருத்துகளைச் சொன்ன ராகுல் டிராவிட், “கே.எல்.ராகுல் பயிற்சி செய்யும் முறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் துரதிர்ஷ்டவசமான முறையில் இன்று தனது விக்கெட்டை இழந்தார். அனைத்து வீரர்களின் வாழ்க்கையில் இது போன்ற சரிவுகளும், கடினமான காலமும் நிகழும். இது குறித்து விளையாட்டு வீரர்கள் கவலைப்படக் கூடாது. இந்த கடினமான நேரத்தில் அணி நிர்வாகம் ராகுலுக்கு துணை நிற்கும். கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை மீண்டும் வழங்குவோம். ஏனென்றால், அவர் வெளிநாட்டு மண்ணில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடிய ஆட்டக்காரர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கடினமான ஆடுகளங்களில் சதம் அடித்திருக்கிறார். எனவே, நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தருவோம். இந்தக் கடினமான காலத்தில் இருந்து அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

 

டிராவிட்டின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.