டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றவர் மாணிகா பத்ரா. ஒலிம்பிக் போட்டிகளின்போது இந்திய அணிக்கான பயிற்சியாளரைப் புறக்கணித்தார். போட்டியில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளரிடமிருந்து எந்த அறிவுரையையும் பெறவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது.
தனது தனிப்பட்ட பயிற்சியாளரைப் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்ததற்காகவே, அவர் தேசிய அணியின் பயிற்சியாளரைப் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மாணிகா பத்ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸிற்கு பதிலளித்த மாணிகா பத்ரா, தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தநிலையில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் மாணிகா பத்ரா தேர்வு செய்யப்படவில்லை.
இதனையடுத்து மாணிகா பத்ரா, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் வீரர்களைத் தேர்வு நடைபெறவில்லை என்றும், தன்னை போன்ற தனிநபர்களைக் கூட்டமைப்பு குறி வைக்கிறது என்றும் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை ஒலிம்பிக் தகுதி சுற்றில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையில், மாணிகா பத்ரா மீது தவறு இல்லை என கூறியது. இதனையடுத்து இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு செயல்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், மாணிகா பத்ராவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
இந்தநிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாக மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டை விசாரிக்க இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஒரு விளையாட்டு வீரர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டை விசாரித்து நான்கு வாரங்களில் இடைக்கால அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் அந்த மூவர் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.