பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது.
இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை - பிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3 ஆவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் நேற்று இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்ல்சன்- பிரக்ஞானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35 நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. இன்று இரண்டாம் சுற்று போட்டி துவங்கிய நிலையில் இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. நேற்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில், இந்த இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. முன்னதாகவே இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், 'கார்ல்சன் 2016 ஆம் ஆண்டு நடந்த போட்டியைப் போன்றே டிரா செய்யும் நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறார்' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.