இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஒல்லி ராபின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமானதோடு, சிறப்பாகவும் பந்து வீசினார். அதேநேரத்தில், அவர் கடந்த 2012-13 ஆண்டுகளில் பதிவிட்டிருந்த இனவெறியைத் தூண்டும் வகையிலான ட்வீட்களும், பாலியல் ரீதியான ட்வீட்களும் வெளிச்சத்திற்கு வந்தன.
இது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து தனது ட்வீட்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், அவரது ட்வீட்கள் தொடர்பாக ஒழுங்கு விசாரணையையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்திவருகிறது.
இதன்தொடர்ச்சியாக இங்கிலாந்து அணியில் அங்கம்வகிக்கும் இன்னொரு வீரரின் பழைய 'இனவெறி' ட்விட்டை விஸ்டன் இணையதளம் வெளியிட்டது. குறிப்பிட்ட அந்த ட்விட்டை பதிவிடுகையில் அந்த வீரருக்கு 16 வயதுதான் என்பதால் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், மேலும் இதுமாதிரியான விவகாரங்களில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், முன்னாள் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் ஆகியோரின் சில ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. அந்தக் குறிப்பிட்ட ட்விட்டர் பதிவுகள், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதைக் கேலி செய்வதுபோல் இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து பட்லர், மோர்கன் ஆகியோரது ட்வீட் குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.