இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 30 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 71 ரன்களை குவித்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா நாங்கள் சரியாக பந்து வீசவில்லை என்றார்.
இந்நிலையில் நாளை நாக்பூரில் நடக்க இருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் பும்ரா பங்கேற்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் அவதிப்பட்டு வந்த பும்ரா தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பும்ரா உமேஷ் யாதவிற்கு மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தெரிகிறது.
பும்ரா தேர்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, “ஒரு பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவதால் மட்டும் ஒட்டு மொத்த நிலைமையும் மாறிவிடாது. இந்த வருடத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பைக்கு என்ன நடந்தது என பார்த்தீர்களா? எனவே ஒரு வீரர் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுக்காத வரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. சாஹல் தொடர்ந்து வேகமாக பந்து வீசுகிறார். மெதுவாக பந்து வீசாதவரை எப்படி விக்கெட்களை எடுக்க முடியும்?” என கூறியுள்ளார்.