Skip to main content

இனவெறிக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி செய்யவிருக்கும் புது முயற்சி!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

Australia

 

இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தை ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் செய்யவிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த முழங்காலிடும் பிரச்சாரத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கெடுக்காதது குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், இனி ஒவ்வொரு தொடரின் துவக்கத்தின் போதும் வெறுங்காலுடன் மைதானத்தில் வட்டவடிவில் நின்று இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறவிருக்கிற முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இது கடைப்பிடிக்கப்பட உள்ளது.

 

இது குறித்து பேட் கம்மின்ஸ் மேலும் கூறுகையில், "வெறும் காலுடன் வட்டவடிவில் நிற்க முடிவெடுத்துள்ளோம். இதை ஒவ்வொரு தொடரின் துவக்கத்திலும் செய்ய இருக்கிறோம். விளையாட்டில் மட்டுமல்ல, தனி நபராகவும் நாங்கள் இனவெறிக்கு எதிரானவர்கள். கடந்த காலத்தில் இதற்கு எதிராக நாங்கள் ஏதும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆகையால் இந்த சிறு விஷயத்தை அறிமுகம் செய்கிறோம்" எனக் கூறினார்.