குழந்தையின்மை பிரச்சனை என்பது பலரும் சந்திக்கக் கூடிய ஒன்று. அதற்கான காரணங்கள் குறித்தும் தீர்வுகள் குறித்தும் கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயினி விவரிக்கிறார்.
குழந்தையின்மை என்பது பெண்களால் மட்டும் ஏற்படுவது அல்ல என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இருபாலருக்கும் அதில் சமமான பங்கு உள்ளது. பெண்கள் பருவம் அடைவது என்பது பொதுவாக 12 வயது முதல் 15 வயதுக்குள் நடக்கக் கூடியது. ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் 10 வயதிலேயே பருவம் அடைவதும் நிகழ்கிறது. அந்தக் குழந்தைகள் அதிக உடல் பருமனோடு இருக்கின்றனர். இதற்கு உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.
அப்படி உடல் பருமனோடு வளரும் குழந்தைகள் திருமணம் முடிந்த பிறகு குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆளாக நேரிடுகிறது. பிறக்கும்போதே சரியான கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களும் இருக்கலாம். இதனால் தாமதமாகப் பருவம் அடைதலும் நிகழலாம். இவர்களுக்கு நிச்சயம் சிகிச்சை தேவைப்படும். கர்ப்பப்பையின் வடிவம் மாறினாலும் பிரச்சனை ஏற்படும். சினைப்பையில் உள்ள நீர் கட்டிகளாலும் மாதவிடாயில் பிரச்சனை ஏற்படுகிறது.
இவர்களுக்கு ஆண் ஹார்மோன் அதிகம் இருப்பதால் முகத்தில் அதிக அளவிலான முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவதும் முக்கியமான பிரச்சனை. பெண்ணின் மாதவிடாய் வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் பிரச்சனை என்ன என்பதைக் கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை மிக முக்கியமானது. இதன் மூலம் எந்த வகையான சிகிச்சை அவர்களுக்குத் தேவை என்பதை மருத்துவர்களால் முடிவு செய்ய முடியும்.