உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் பெயரை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருந்து வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மால்பாஸ். இவர் வரும் ஜூன் மாதத்துடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்ததாக அந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தான் அஜய் பங்காவின் பூர்வீகம் ஆகும். இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பொருளாதாரப் படிப்பும், அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பட்ட மேற்படிப்பும் முடித்துவிட்டு இந்தியாவில் சில ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்ற இவர் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
அஜய் பங்கா தற்போது பங்கு சந்தை நிறுவனம் ஒன்றில் துணை தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவரது பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர். உலக வங்கியின் உயர் பதவியில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.