வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக வங்கியின் தலைவர் பொறுப்பை ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார் ஜிம் யோங் கிம். 2016 ல் இவரது பதவிக்காலம் முடிந்தபிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இவரை இந்த பொறுப்பில் நியமித்தார் ஒபாமா. இந்நிலையில் வரும் 2022 ஆம் ஆண்டு வரை தனது பதவிக்காலம் உள்ள நிலையில் தற்பொழுது திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார் கிம். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'எனக்கு புதிய சவால்களை எடுத்துக்கொள்ளும் நேரம் இதுதான் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அந்த வகையில் மக்கள் பணிகளுக்கு பயன்படும் வகையில் தனியார் நிதியுதவி வழங்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவே இந்த பதவியிலிருந்து விலகுகிறேன். வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிப்பதற்காக செயல்படும் ஒரு அமைப்பில் நான் இணைகிறேன். இந்த அமைப்பு ஏழை நாடுகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக நானும் சிலரும் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய ஒரு நிறுவனமாகும்' என கூறியுள்ளார்.