உக்ரைன் நாட்டுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர் காரணமாக, உக்ரைன் நாட்டில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து மீள அதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவி கடன் மற்றும் மானியம் என இரு வகைகளிலும் வழங்கப்படும்.தாங்கள் அளிக்கும் இந்த தொகை மூலம் மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட அத்தியாவசியத் துறையினருக்கு ஊதியம், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவற்றை உக்ரைன் அரசு வழங்க முடியும். இது தவிர, இங்கிலாந்து, டென்மார்க், லாட்வியா, லித்துவேனியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருக்கும் நிவாரண தொகைகளை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அறிவித்துள்ள உதவித்தொகை அளவு 1,200 கோடி டாலரைக் கடந்திருக்கிறது.