அதிபர் ட்ரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, நாளை முதல் அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ-சாட் செயலிகள் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் மற்றும் வீ-சாட் செயலிகளை அமெரிக்காவில் தடை விதிப்பதாக கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ட்ரம்ப் அறிவித்தார். இத்தடையானது 45 நாட்களில் அமலுக்கு வரும் என்று இறுதிக்கெடு விதித்தார். டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனம் இத்தடையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தது. அதை ஏற்க மறுத்த ட்ரம்ப், டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமையை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் அல்லது தடை விதிக்கப்படுவது உறுதி என்று நெருக்கடி கொடுத்தார். இந்தியாவில் விதிக்கப்பட்ட டிக்டாக் மீதான தடை அந்நிறுவனத்திற்கு கணிசமான அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து வேறு வழியில்லாமல் ட்ரம்ப் கோரிக்கையை ஏற்று பைட்டன்ஸ் நிறுவனம் சில அமெரிக்கா நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தோடு பைட்டன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமையைக் கைப்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இருதரப்பும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தன.
இந்நிலையில் நாளை முதல் டிக்டாக் மற்றும் வீ-சாட் செயலியை அமெரிக்காவில் புதிய பயனாளர்கள் பதிவிறக்கம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நாளை அவை நீக்கம் செய்யப்பட இருக்கின்றன. மேலும் இச்செயலிகளின் தாய் நிறுவனங்களுக்கு நவம்பர் 12-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய பயனாளர்கள் இவ்விரு செயலிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். நவம்பர் 12-ம் தேதிக்குப் பிறகும் இறுதி உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில் இவ்விரு செயலிகள் மீது முழுமையான தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.