Skip to main content

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர்; உணவு இல்லாமல் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

An Indian woman suffering from food shortages at israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

 

மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்குக் கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்த போரினால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 நாள்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் சேலச்சோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷேர்லி. இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுக்கு சென்று அங்கு முதியவர்களுக்கு பணிவிடை செய்யும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1 வாரமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் போர் நடந்து வருகிறது. இதனையடுத்து, ஹமாஸ் படையினர் நிர்வகித்து வரும் காசா பகுதி அருகே இஸ்ரேலில் தான் ஷேர்லி வசித்து வருகிறார். இந்த போர் காரணமாக அந்த பகுதியில் ஷேர்லி சிக்கித் தவித்து வருகிறார். அவர் அங்கு தனது செல்போன் மூலம் கேரளாவில் வாழும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். 

 

அப்போது அவர், “பயங்கர ராக்கெட் குண்டு வெடித்த சத்தத்துடன் தான் நான் காலை எழுந்தேன். கடந்த 3 நாள்களாக உயிரை கையில் பிடித்துக் கொண்டு இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். நான் பணிபுரியும் இடம் பாதுகாப்பானதாக இல்லை. 3 நாள்களாக வீட்டைப் பூட்டிக் கொண்டு உணவு, தண்ணீர் இல்லாமல் வசித்து வருகிறேன். இதேபோல், பல இந்தியர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்” என்று பேசினார். இதேபோல் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பதுங்கு குழியில் வாழ்ந்து வருவதாகத் தனது கணவரிடம் தகவல் கூறியிருக்கிறார். 

 

திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை இணை பேராசிரியர் ராதிகா என்பவர் இஸ்ரேலில் பதுங்கு குழியில் வாழ்ந்து வருவதாகத் தனது கணவருக்கு குறுந்தகவல் மூலம் தகவல் கூறியுள்ளார். இது குறித்து அவரது கணவர் ரமேஷ் கூறியதாவது, “எனது மனைவி  ராதிகா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பயிற்சிக்காக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார். தற்போது ஏற்பட்ட சூழலில் எனது மனைவி அங்கு சிக்கியுள்ளார். அவர் இருக்கும் பகுதிக்கும், தாக்குதல் நடக்கும் பகுதிக்கும் 60 கி.மீ தான் இடைவெளி இருக்கிறது. தொடர்ந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாகத் தெரிவித்தார். இஸ்ரேல் அரசு, குண்டு வெடிப்பு சம்பவங்கள் சமயங்களில் முன்னெச்சரிக்கையாக ‘சைலன்சர்’ ஒலியை எழுப்ப செய்வார்கள். அப்போது அனைவரும், பாதுகாப்புடன் இருப்பதற்காக பதுங்கு குழியில் சென்று தங்குவதாகவும், நிலைமை சரியான பிறகு அறைக்கு வந்து தங்குவதாகவும் எனது மனைவி தெரிவித்துள்ளார்.” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்