Skip to main content

நேபாள விமான விபத்து: இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கருப்புப் பெட்டி கண்டெடுப்பு 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Nepal plane crash

 

கடந்த ஞாயிறு அன்று நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த அனைவரும் பலியான நிலையில், விமானத்தின் கருப்புப்பெட்டி இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கிடைத்துள்ளது. 

 

நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிறன்று நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது. இதில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள் உட்பட 22 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. தீவிர தேடுதலுக்குப் பிறகு விமானம் இமயமலை தவளகிரி சிகரம் அருகே விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

 

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 22 பேரும் பலியாகினர். இவர்களது உடல்களையும் விமானத்தின் கருப்புப்பெட்டியையும் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுவரும் நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒருவரின் உடலைத் தேடும் பணி இன்று காலை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்புப்பெட்டி தலைநகர் காத்மண்டுவுக்கு கொண்டுசென்று விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

 

முதற்கட்ட விசாரணையில், அதிகப்படியான பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்