Skip to main content

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஊரடங்கு விதித்த நாடு! 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

austria

 

உலகிலேயே கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டங்களில் ஒன்றாக ஐரோப்பா இருந்து வருகிறது. இந்தச்சூழலில் அண்மைக்காலமாக அக்கண்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா கண்டத்தின் இயக்குநரான ஹான்ஸ் க்ளூக், ஐரோப்பா கண்டத்தில் உள்ள 53 நாடுகளில் கரோனா பரவும் வேகம் மிகுந்த கவலையளிப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் ஐரோப்பா மீண்டும் கரோனா தொற்றின் மையமாகியுள்ளது என்றும், கரோனா தொற்று அதிகரிப்புக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், குறைவாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதுமே காரணம் எனவும் கூறியிருந்தார்.

 

இந்தநிலையில் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில், 10 நாடுகள் மிகவும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் பல்வேறு நாடுகள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியா, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பணி, படிப்பு, மருத்துவத் தேவை, மளிகைப் பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட விஷயங்களுக்காக மட்டுமே வெளியில் செல்ல முடியும். திரையரங்குகள், உணவகங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல இயலாது. இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஊரடங்கு உத்தரவு, வரும் 24 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தநாட்டில் 65 சதவீத மக்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்