Skip to main content

“அவர்களுக்கு முன்னால் நான் தீக்குளிக்க வேண்டும்” - காஸ் சிலிண்டரை திறந்துவிட்டு பெண் மிரட்டல்! 

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Woman made tragedy in chennai

 

சென்னை, திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(45). இவர், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை  பணியாளர்களின் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி(40). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

 

இந்நிலையில், ராஜேஷ் கண்ணாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ரேணுகா தேவிக்கு சந்தேகம் எழுந்து அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், நேற்று மதியம் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

ராஜேஷ்கண்ணா, வேலைக்கு நேரமானதைத் தொடர்ந்து பணிக்கு கிளம்பி சென்றுள்ளார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ரேணுகாதேவி, தனது கணவர் ராஜேஷ் கண்ணாவுக்கு போன் செய்து, ‘காஸ் சிலிண்டரை திறந்து விட்டு, வீட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு’ தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

 

இதில் பதட்டமடைந்த ராஜேஷ் கண்ணா, உடனடியாக தனது வீட்டின் அருகில் இருப்பவருக்கு போன் செய்து விவரம் தெரிவித்து உடனடியாக வீட்டிற்கு சென்று பாருங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அதன்படி மணலி போலீசார், 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்களுடன் விரைந்து வந்தனர். முதல்கட்டமாக போலீசார் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அப்பகுதி முழுவதும் மின்சாரத்தையும் துண்டித்தனர். பின்னர் ரேணுகாதேவியிடம் சமாதானம் பேசினர். அதற்கு ரேணுகா தேவி, `எனது  கணவன் ராஜேஷ்கண்ணாவுக்கு ஜெயா என்ற பெண்ணுடன் முறையற்றத் தொடர்பு உள்ளது. அந்த பெண் இங்கே வர வேண்டும். அவர்களுக்கு முன்னால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இதுதான் எனது விருப்பம்’ என கூறினார்.

 

மேலும், அவரை சமாதானம் செய்தனர். ஆனால், அவர் சமாதானம் ஆகவில்லை. ஏறக்குறைய 5 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் ரேணுகாதேவி கதவை திறக்கவில்லை. இதனால் போலீசார், மாநகர காவல் மீட்பு குழுவினருக்கு  தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மாநகர காவல் மீட்பு குழு, போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து தீப்பற்றாத திரவத்தை வீட்டுக்குள் பீய்ச்சியடித்து ரேணுகாதேவியை பத்திரமாக மீட்டனர். அப்போது ரேணுகாதேவி மயங்கி விழுந்ததால் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்