Skip to main content

பதவியேற்று பத்தே நாட்களில் ரூ.1 கோடி நிதி திரட்டி அசத்திய துரைமுருகன்!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
dmk


தி.மு.க. பொருளாளராக பதவியேற்று பத்தே நாட்களில் ரூ.1 கோடி தேர்தல் நிதி திரட்டி துரைமுருகன் அசத்தியுள்ளார்.

தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் சமீபத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அன்றே “தி.மு.க.வுக்கு அதிக நிதி சேர்க்க வேண்டும். அதற்கு தி.மு.க.வினர் முன் வரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். தற்போது தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

இதையடுத்து, தேர்தல் நிதி திரட்டுவதில் துரைமுருகன் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மாவட்ட கழகங்கள் சார்பில் தேர்தல் நிதி திரட்டும் பணியை தொடங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் பதவி ஏற்ற பிறகு கடந்த 5ம் தேதி தனது சொந்த மாவட்டமான வேலூர் சென்றார். அங்கு முதல்கட்டமாக துரைமுருகன் வேலூரில் தேர்தல் நிதியை திரட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது, வேலூர் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்கள் சார்பிலும், வேலூர் நகர தி.மு..க சார்பிலும் மாவட்ட செயலாளர்கள் காந்தி எம்.எல்.ஏ., நந்தகுமார் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொருளாளர் துரைமுருகனிடம் ரூ.1 கோடி நிதியை வழங்கினர்.
 

dmk


இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல், குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொருளாளர் துரைமுருகனிடம் வழங்கப்பட்ட நிதியை பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம், துரைமுருகன் வழங்கினார்.

 

சார்ந்த செய்திகள்