சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (27/03/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளது. தனிப்பட்டக் காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். துபாய் வர்த்தக கண்காட்சி முடியும் தருவாயில் அங்கு சென்றது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
துபாய் இருந்து வீடியோ வெளியிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மேற்கொண்டுள்ள துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து, இன்று விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், தனி விமானத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, துபாய் பயண நேரத்தில், விமான வசதி கிடைக்காத காரணத்தால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானத்திற்கு கூட, திராவிட முன்னேற்றக் கழகம் தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை நான் முதலிலே தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டுமல்ல, கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்து, உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய, ஒவ்வொரு தமிழ் குடும்பத்தினுடைய வளர்த்திக்காகவும், வாழ்விற்காகவும், அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பதை நேற்று இங்கு வந்திருக்கக்கூடிய தமிழ் சமுதாயம், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வரவேற்பில் இருந்து நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தக பொருட்காட்சி என்பது முடியுறும் தருவாயிலே முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று. இது கோவிட் காரணமாக தள்ளிப்போய் வந்துள்ளது; இன்னும் கூட, இது ஆரம்பிக்கும் போது கூட, இதற்கு வரவேற்பில்லை; முடியும் போதுதான் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தான் உலகின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு வருகிறார்கள். எனவே, இந்த சமயத்தில் வந்து திறந்து வைப்பது தான் சரியான வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து தான் முதலமைச்சர், இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.