Skip to main content

ஓடும் அரசுபேருந்தில் கழன்று ஓடிய சக்கரம்... திக் திக் பயணத்தில் தப்பிய பயணிகள்!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

நெல்லை மாவட்டத்தின் தென்காசி அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குட்பட்ட தடம் எண் 182 பேருந்து தினசரி ட்ரிப்பாக தென்காசியிலிருந்து கடையம், சேரான்மாதேவி, களக்காடு வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 06 மணிக்கு தென்காசியிலிருந்து கிளம்பிய அந்த தடம் எண் கொண்ட பேருந்து கடையம் வந்து பின் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது.

 Travelers who survived the trip


ஆழ்வார்குறிச்சியை அடுத்த கீழாம்பூர் அக்ரஹாரம் அருகில் பாலப்பணிகள் நடந்த வருவதால் அதன் பொருட்டு போடப்பட்ட சர்வீஸ் சாலை வழியாக பேருந்து மெதுவாகச் சென்றது. அப்போது பஸ்சில் முன்பகுதி இடது சக்கரம் கழன்று சாலையில் ஓடியது, இதனால் பஸ் ஒரு புறமாகச் சாய்ந்தபடி இழுத்துக் கொண்டே சென்றது. பயணிகள் அலறினர். விரைந்து செயல்பட்ட டிரைவர் சமாளித்து பிரேக் அடித்து பஸ்சை நிறுத்தியதால் பேருந்து கவிழ்வதிலிருந்து தப்பியது. 

இதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஸ்பாட்டுக்கு வந்த ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. தினேஷ்குமார் போக்குவரத்தை சீர்படுத்தி பேருந்துகளை மாற்று வழியில் திருப்பி அனுப்பினார். தென்காசியிலிருந்து பணிமனை ஊழியர்கள் வந்து சக்கரத்தை மாற்றிய பின்னரே பேருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.

ஏற்கனவே இந்த வழித்தடத்தில் சென்ற TN 72 1210 என்ற பதிவு எண் கொண்ட பஸ் பழுதடைந்த காரணத்தால் மாற்றாக இரு நாட்களுக்கு முன்பு மேற்படி பேருந்து செயல்பட்டது கவனிக்கத்தக்கது.

இதேபோல் அண்மையில் கோவையில் அரசு பேருந்தின் மேற்கூரை அடித்த காற்றில் பறந்து சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு ஆளான நிலையில் தற்போது வகையாக சிக்கியுள்ளது அரசு பேருந்தின் இந்த அவலம். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்