Skip to main content

“சேலைக்கு கூலிகளை குறைத்துக் கொடுக்கிறார்கள்” - அமைச்சரிடம் நெசவாளர்கள் புகார்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Weavers complain to minister i periyasamy that wages for one saree has been reduced

 

ஒரு சேலைக்கு ரூ. 300 முதல் ரூ. 400 வரை கூலிகளை கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் குறைத்துக் கொடுப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் நெசவாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அறிஞர் அண்ணா நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், காந்திஜி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், சித்தையன்கோட்டை, கமலா நேரு, ம.பொ.சி. சிலம்புச் செல்வர் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், நம்நாடு, அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் உட்பட 8 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. தற்போது சின்னாளபட்டியில் கூட்டுறவுச் சங்கங்களில் ஒரு சில சங்கங்கள்; தனியார்களிடமிருந்து கோரா பட்டு நூல்களை வாங்கி சேலைகளை நெசவு செய்யும் நெசவாளர்களிடம் கொடுத்து கோரா பட்டு சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

 

தற்போது நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் நெசவு நெய்யும் தொழிலாளர்களுக்கு சேலை ஒன்றுக்கு ரூ. 900 மற்றும் ரூ. 1000 கூலி கொடுப்பதற்குப் பதிலாக ரூ. 500 மற்றும் ரூ. 600 கொடுப்பதாகத் தெரிய வருகிறது. சின்னாளபட்டிக்கு நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டுறவுச் சங்கங்களில் கோரா பட்டு சேலைகள் தேக்கம் அடைந்திருப்பதால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தாங்கள் நெய்யும் சேலைகளுக்கு கூலிகளை குறைத்துக் கொடுப்பதாகவும், நெசவு நெய்வதற்கு பட்டு நூல் தர மறுப்பதாகவும் கூறியதோடு இதனால் பெரும்பாலான கைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தனர். 

 

கடந்த முறை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் கூட்டுறவுச் சங்கங்களில் கோரா பட்டு சேலைகளை கொள்முதல் செய்யாமல் இருந்தபோது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தலையிட்டதால் தங்கள் பிரச்சனை தீர்ந்தது. தற்போது மீண்டும் இதே பிரச்சனை உள்ளதாகக் கூறினார்கள். அவர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் கைத்தறி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனையைத் தீர்ப்பதாக உறுதியளித்தார். 

 

அப்போது அங்கிருந்த நெசவாளர்கள் மத்தியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார். இப்போது சின்னாளபட்டியில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்ப்பதோடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட குறையாமல் கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாமல் தவிக்கும் கைத்தறி நெசவாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க இடங்களைத் தேர்வு செய்து வருகிறோம். ஒரு வருட காலத்திற்குள் சுமார் 300 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்கும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்