தென்காசி நகராட்சியின் 8- வது வார்டிலிருக்கும் செல்வியை 2011- ல் பா.ஜ.க. நகராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்ததில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2016- ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், தாமரைக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் வற்புறுத்தலின் பேரில் தென்காசி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கரன்சிகள் காலியானதோடு கரையேறவும் முடியாமல் போயிருக்கிறது.
இரண்டு முறை தோற்றதால் விக்கிரமாதித்த முயற்சியாக தளராமல் தற்போதைய தென்காசி நகராட்சியின் தனது 8- ம் வார்டு பெண்களுக்கானது என ஒதுக்கப்பட்டதால் போட்டியிடும் பொருட்டு பா.ஜ.க. கட்சித் தலைமைக்கு விருப்பமனுக் கொடுத்தவர் நேர்காணலுக்கும் சென்றிருக்கிறார்.
ஆனால் எதிர்பாராத வகையில் கட்சித் தலைமை பொன்னம்மாள் என்பவரிடம் 5 லட்சம் வாங்கிக் கொண்டு அவரை 8- வது வார்டின் வேட்பாளராக அறிவித்ததாக தகவல் செல்விக்குப் போக, அதிர்ச்சியானவர் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ராமராஜை போனில் வறுத்தெடுத்திருக்கிறார்.
அரசியல்னா என்னான்னு தெரியாம சிவனேன்னு இருந்த என்னய பிரைன் வாஷ் பண்ணி 2011லயும், 2016ன்னு ரெண்டு தடவையும் தேர்தல்ல போட்டியிட வைச்சீங்க. நான் என்ன செய்தேன். நான் கட்சிக்காக உழைச்சிருக்கேன். எனக்கு ஏன் சீட்டுத் தரல. வேற ஒருத்தருக்கு சீட் குடுத்திருக்கீங்க. அவங்களே சொல்றாங்களே 5 லட்சம் குடுத்திருக்கேன்னு. நான் அறிமுகமானவ. அவங்க புதுசா வந்துருக்காங்க. அந்த வேட்பாளருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க.
இதோடு கட்சிக்கும், எனக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. என் வீட்டுக்காரர் எதுக்கும் வரமாட்டார். நானும் என் வீட்டுக்காரரும், இனிமே எதுக்கும் வரமாட்டோம். கட்சி கெட்டுப் போறதுக்கு இந்த மாதிரி பண்றது தான் என்று செல்வி படபடவென பொறிய மாவட்டத் தலைவரான ராமராஜ் செல்வியைச் சமாதானப்படுத்தியுள்ளார். நான் யார் கிட்டயும் சீட்டுக்குப் பணம் வாங்கல. இறைவன் உங்களுகு்குத் துணை நிற்பான். நீங்க அடுத்த பதவிக்குப் போகலாம். என்று சமாளித்திருக்கிறார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்களில் வைரல்.
இதுகுறித்து நாம் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ராமராஜிடம் கேட்டதற்கு உள்கட்சி விவகாரம் என்று முடித்துக் கொண்டார். செல்வியிடம் கேட்டதில், நடந்தவைகளை மாநிலத் தலைவருக்குத் தெரியப்படுத்திவிட்டேன். பதில் வரல. என்கிறார்.
ஆனாலும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்த பா.ஜ.க.வை ஒரு கை பார்க்கிற வகையில், தனது 8- வது வார்டிலேயே பா.ஜ.க.வின் அடையாள துப்பட்டாவோடு சென்று சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டார் செல்வி. ஏற்கனவே இரண்டு முறை தேர்தலைச் சந்தித்து பிரபலமான செல்வியின் மோதல் கட்சிக்குக் கடுமையான நெருக்கடியைத் தரும் என்பதால் பா.ஜ.க.வினர் அவரை வாபஸ் வாங்க வைக்கிற முயற்சியையில் தீவிரமாகிவிட்டனர்.
இவர்களின் குடைச்சல் தாளமாட்டாத செல்வியோ, தற்போது தென்காசி நகரைவிட்டு வேறு ஒரு ஊரிலிருக்கிறாராம்.