விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் விழுப்புரம் நகர பகுதியைச் சேர்ந்த சாலாமேடு பகுதியில் புதிதாக ஒரு வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த மனையில் வீடு கட்டுவதற்காக கட்டிட வரைபட நகல் அனுமதி கேட்டு விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து காத்திருந்தார்.
அவருக்கு உடனடியாக அனுமதி கொடுக்காமல் நகராட்சி அலுவலகத்தில் அலைக்கழித்து வந்துள்ளனர். இதனையடுத்து வழக்கறிஞர் ராஜசேகர் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராக வேலையில் இருக்கும் ஜெயவேல் என்பவரை சந்தித்து, “தனக்கு கட்டிட வரைபட அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது அது உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று கேட்டுள்ளார்.
அப்போது ஜெயவேல் ரூ.8,000 லஞ்சமாக பணம் கொடுத்தால் கட்டிட வரைபட நகல் விரைவில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதற்காக தனியார் கட்டுமான பொறியாளர் மோகன கிருஷ்ணன் என்பவர் இருவருக்குமிடையே இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார்.
இதையெல்லாம் கேட்டு மனம் நொந்துபோன வழக்கறிஞர் ராஜசேகர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை மேலும் நாம் முறையாக இடம் வாங்கி அதில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்கும்போது அநியாயமாக லஞ்சம் கேட்கிறார்களே என்று மனவேதனை அடைந்துள்ளார். இதனால் ராஜசேகர், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரடண்டு யுவராஜ், இவரது புகாரை ஏற்று கொண்டதோடு அவர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தலைமைக் காவலர்கள் விஜய், தாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் சகிதமாக நேற்று காலை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்குவந்து மறைந்து காத்திருந்தனர். அதற்கு முன்பாக வழக்கறிஞர் ராஜசேகரிடம் ரசாயனம் பூசப்பட்ட 8,000 ரூபாய் பண நோட்டுகளை கொடுத்து அனுப்பி இருந்தனர். அந்தப் பணத்தை ராஜசேகர் ஜெயவேலிடம் நேரில் வழங்கினார். அவர் பணத்தை பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
இதில் இடைத்தரகராக செயல்பட்ட பொறியாளர் மோகனகிருஷ்ணனனும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். நகரமைப்பு அலுவலர் ஜெயவேலின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. இவர் 14 ஆண்டுகளாக விழுப்புரத்தில் பணியாற்றி வருவதாகவும் தற்போதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கில் சிக்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதனால் நகராட்சி அலுவலகம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக கிடந்தது.