Skip to main content

மாணவிகளை எரித்து கொலை செய்தவர்களை விடுதலை செய்த ஆளுநர் 7 பேரை ஏன் விடுதலை செய்யவில்லை: விஜயகாந்த்

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
vijayakanth



அப்பாவி மாணவிகள் பேருந்தில் பயணித்த போது, உயிரோடு பேருந்தில் வைத்து எரித்து கொலை செய்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேரை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை ஏன் விடுதலை செய்யவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்து கொல்லப்பட்ட அதிமுகவை சேர்ந்த மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். 
 

ஜெயலலிதா கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, அப்பாவி மாணவிகள் பேருந்தில் பயணித்த போது, உயிரோடு பேருந்தில் வைத்து எரித்து கொலை செய்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேரை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட மொத்தம் ஏழு பேரை ஏன் விடுதலை செய்யவில்லை. 
 

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்து வரும் இந்த ஏழுபேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரை விடுவிக்க ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநர், கல்லூரி மாணவிகளை பேருந்தில் வைத்து உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட அதிமுக வின் நிர்வாகிகள் மூன்றுபேரை மட்டும் விடுதலை செய்திருப்பது, ஆளும் அரசின் நிர்பந்தமா, இல்லை, மத்திய அரசின் அரசியல் நிர்பந்தமா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 
 

ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் என்பது போல் இந்த விடுதலை அமைந்துவிடும். அதிமுகவினர் மூன்று பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்ததுபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.    

 

 

 

 

சார்ந்த செய்திகள்