Skip to main content

"கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை பா.ம.க. பெற்ற வெற்றி மகத்தானது!"- டாக்டர் ராமதாஸ் பெருமிதம்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

 

"The victory of the BJP from Gummidipoondi to Kanyakumari is immense!" - Dr. Ramdas proud!

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (22/02/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி கவுரவமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. பேரூராட்சிகளில் 73 இடங்களிலும், நகராட்சிகளில் 48 இடங்களிலும் மாநகராட்சிகளில் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையாதப் பகுதிகளில், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் சில இடங்களைக் கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ளது.

 

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வாய்ப்பை இழந்தவர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

உள்ளாட்சிகள் தான் மக்களுக்கு நெருக்கமானவை; உள்ளாட்சிகள் தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருபவை ஆகும். உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடந்தால் தான் தமிழ்நாடும், இந்தியாவும் முன்னேறும் என்பதாலும், ஜனநாயகம் தழைக்கும் என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்வைத்து போட்டியிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்தே அதிகார சுனாமி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது. மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில் பணம் மூலம் தான் வாக்குகள் வாங்கப்பட்டன.

 

ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை மூலதனமாக வைத்து தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தன. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பணம் படைத்தவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகத் தான் கருத வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவை விடவும் ஜனநாயகத்திற்கு பணநாயகத்தால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலும், ஆபத்தும் தான் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தமிழ்நாட்டின் வடக்கு எல்லையான கும்மிடிப்பூண்டியில் தொடங்கி, தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி வரை பா.ம.க. பரவலாக வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இனி வரும் தேர்தல்களில் பா.ம.க.வின் வெற்றி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரை வெற்றி, தோல்விகள் தற்காலிகம். மக்கள் பணி தான் நிரந்தரம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக பா.ம.க. எப்போது போல் முதல் கட்சியாக குரல் கொடுக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியை பெற முடியாமல் போனவர்களும், நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வழக்கம் போல கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றிகளைக் குவிக்க உத்திகளை வகுத்து அதன்படி பா.ம.க. செயல்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்