Skip to main content

'அப்பட்டமான அடக்குமுறை கட்டவிழ்ப்பு'-பாமக அன்புமணி கண்டனம்

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
'Unleashing the oppression of workers blatantly'-pmk Anbumani condemned

பல நாட்களாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராடி வந்த நிலையில் அவர்கள் போராட்ட பந்தலோடு நள்ளிரவில் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பதாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதில் உடன்பாடு எட்ட முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இப்படியாக தொடர்ந்து நேற்று முப்பதாவது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரம் போராட்ட பந்தல்கள் நள்ளிரவில் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்பொழுது போலீசாரின் தடுப்புகளை மீறி 200 க்கும் மேற்பட்ட சாம்சங் பணியாளர்கள் பேரணியாக நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும்  போராட்டம் நடத்துவதற்காக அங்கு கூடியுள்ள ஊழியர்களை ஐந்து நிமிடத்தில் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் நள்ளிரவில் அகற்றப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காஞ்சிபுரம் மாவட்டம்  சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத்  தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட  பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து  சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

'Unleashing the oppression of workers blatantly'-pmk Anbumani condemned

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின்  முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய தமிழக அரசு, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை கண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில்  கையெழுத்திடச் செய்த அரசு, அதற்கு உடன்படாத  தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பதும், தொழிலாளிகளின் நலன் குறித்து அது ஒருபோதும் கவலைப்படாது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும்  விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசின் இந்த அடக்குமுறையையும், துரோகத்தையும் தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. மக்கள்விரோத அரசுக்கு தொழிலாளர்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்