Skip to main content

நிறைவேறாத ரயில் பயண ஏக்கம்; பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

 An unfulfilled longing for train travel; A tragic decision taken by a school student

 

தன்னை பலமுறை ரயிலில் அழைத்துச் செல்லும்படி பள்ளி மாணவன் ஒருவர் பெற்றோர்களிடம் தன் ஆசையை வெளிப்படுத்திய நிலையில் பெற்றோர்கள் அழைத்துச் செல்லாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம் போடி, கீழத்தெரு பேச்சியம்மாள் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி ஜெயா. இந்த தம்பதிக்கு முத்து, பாலாஜி என இரண்டு மகன்கள் உள்ளனர். ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்து வரும் நிலையில், தாய் ஜெயா அதேபகுதியில் உள்ள ஏலக்காய் கடையில் வேலை செய்து வந்தார்.

 

இந்நிலையில் இளைய மகன் பாலாஜி ரயில் பயணத்தின் மீது அதிகம் ஆசை கொண்டதாகக் கூறப்படுகிறது. போடியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தொடங்கியதிலிருந்தே அந்த ரயில் நிலையத்தை அவர் சுற்றிச் சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தன்னுடைய பெற்றோர்களிடம் தன்னை ரயிலில் அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர்கள் பாலாஜியை அழைத்துச் செல்லவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சிறுவன் பாலாஜி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சிறுவன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் 'என்னுடைய ஏக்கத்தை தான் புரிந்து கொள்ளவில்லை, அண்ணனையாவது நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்' என எழுதியுள்ளார். ரயிலில் பயணம் செய்ய முடியாததால் சிறுவன் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்