Skip to main content

19 பேர் உடல் சிதறி பலி: வெடிமருந்து ஆலையை மூடக்கோரி 9வது நாளாக தொடர் போராட்டம் 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். இதனால் தொழிற்சாலையின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, தொழிற்சாலை மூடப்பட்டது. இந்த தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சுகாதார கேடுகள், நிலத்தடி நீர் பாதிப்பு, ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகள் ஆகியவை குறித்து போராட்ட குழுவினர், பொதுமக்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

 

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டது. அதன்படி வெடிமருந்து தொழிற்சாலைக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பஷர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பல கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்து தொழிற்சாலைக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது.

 


 

trichy protest

 

இதனை எதிர்த்து பொதுமக்கள் மீண்டும் மதுரை ஐகோர்ட்டை நாடினர். இதையடுத்து அதிகாரிகள் வழங்கிய தடையில்லா சான்றுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
 

இந்நிலையில் தொடர்ந்து தொழிற்சாலையில் பணிகள் நடப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்தி அங்கு வேலை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தினம், தினம் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், தொழிற்ச்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி டி.முருங்கப்பட்டியில் தொடர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 

தொடர் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் டி.முத்துக்குமார் கலந்து கொண்டார். பொதுமக்களின் கோரிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர எந்த அதிகாரியும் வரவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஒரு போலீசார் கூட அங்கு வரவில்லை.

 

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் த.முருங்கப்பட்டி வெடிமருந்து ஆலையை மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

 

துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அம்மாப்பட்டி, சிங்களாந்தபுரம், கீரம்பூர், சிக்கதம்பூர், தளுகை, எரகுடி, மாராடி, புத்தனாம்பட்டி, அபினிமங்கலம் உள்ளிட்ட 58 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
 

அனைத்து ஊராட்சிகளிலும் பசுமைவீடுகள், பிரதமமந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு செய்யவும், ஏரிகளில் வண்டல்மண், சவுடுமண் எடுக்க விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் த.முருங்கப்பட்டியில் உள்ள வெடிமருந்து ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். ஆலையின் ஆக்கிரமிப்பில் உள்ள மண்மலைப்பாதையை 100 நாள்வேலைதிட்டத்தின்கீழ் சீரமைக்க வேண்டும். ஆலை ஆக்கிரமிப்பில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் மூலமாக மீட்பது மற்றும் கிராமங்களில் வடிகால் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

உப்பிலியபுரம் ஒன்றியம் மாராடி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்தின் ஊழல்கள் கண்டித்து கிராமமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் ஆலையை மூட கோரி மக்கள் தொடர்ந்து 9 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்