திருச்சி சேதுராம் பிள்ளை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 55). இவர் கண்டோன்மென்ட் பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில் திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பெரியசாமி காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 27) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கணக்காளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்கு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்ட போது பெட்ரோல் கடன் பெற்ற சில நிறுவனங்கள் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கணக்காளர் தெரிவித்தார். பின்னர் நிர்வாகத் தரப்பில் கடன் பெற்ற நிறுவனங்களிடம் விசாரித்தபோது அந்நிறுவனங்கள் அந்தத் தொகையை கணக்காளரிடம் வழங்கி விட்டதாக தெரிவித்தன. ஒவ்வொரு முறை அந்த நிறுவனங்கள் பணத்தை வழங்கும் போது சிறு தொகையை எடுத்து விட்டு மீதமுள்ள தொகையை வரவு வைத்து ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமநாதன் கணக்காளரிடம் அந்த தொகையை செலுத்துமாறு கண்டித்துள்ளார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்து தனது நண்பர் திருச்சி உலகநாதபுரம் கருணாநிதி தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 36) என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிவு செய்து பணமோசடி செய்த கணக்காளர் பிரபாகரன், அவரது நண்பர் சரவணன குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.