தமிழ்த் திரையுலகின் ரசிகர்கள் தாண்டி பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெகு விமரிசையாக ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளன. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாது நிறைய திரைப்பிரபலங்களும் ரசிகர்களுடன் படங்களைக் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பட வெளியீட்டின் போது பிரச்சனைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ரசிகர்கள் நடிகர்களின் கட்அவுட்கள் வைக்கக் கூடாது. திரையரங்கிற்குள் வெடிபொருட்கள் கொண்டுவரக் கூடாது. முழக்கங்கள் எழுப்பக் கூடாது. பட வெளியீட்டின் போது அது தொடர்பான ரசிகர்களின் ஆரவாரத்தால் ஏற்படும் சேதங்களுக்கு ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இதனால் ஏற்படும் சேதாரங்களுக்கான இழப்பீடு அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என பல்வேறு மாவட்ட எஸ்.பி.க்கள் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
தென்காசி மாவட்டத்திலும் இரு தரப்பு ரசிகர்களும் பட வெளியீட்டுக்கு முன்னதாக மிகுந்த பரபரப்பாகக் காணப்பட்டனர். இந்நிலையில், சங்கரன்கோவில் நகரின் ஒரு தியேட்டரில் துணிவு படம் வெளியாவதை முன்னிட்டு இன்றைய தினம் வாரிசு, துணிவு படங்களின் போஸ்டர்கள் நகர ரசிகர்கள் சார்பாக பிரத்தியேகமாகத் தயார் செய்து ஒட்டியிருந்தனர். தியேட்டரில் குறிப்பிட்டபடி இரவு 2 மணிக்கு துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி என்பதால் அதற்கு முன்பாகவே ரசிகர்கள் அங்கு திரண்டனர். மேலும், பட்டாசும் வெடித்துள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் காட்சி தொடங்கப்படவில்லை. வெகு நேரமாகியும் படம் திரையிடப்படாததால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவர்களைக் கலைத்தனர். பதற்றமான சூழலில் அதிகாலை நேரம் தியேட்டருக்கு வந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்காக மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின் படம் திரையிடப்பட்டது.