Skip to main content

புகையிலைப் பொருள்கள் கடத்தல்; பெண் உள்பட 3 பேர் கைது!      

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Three people, including a woman, were arrested; Police investigation

 

சேலம் அருகே, பெங்களூருவில் இருந்து காரில் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த பெண் உள்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது  செய்தனர். 

 

கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவது தொடர்கிறது. இதையடுத்து, போதைப்  பொருள்கள் ஊடுருவலைத் தடுக்க, சேலம் - கர்நாடகா எல்லையோரத்தில் உள்ள கொளத்தூர், தீவட்டிப்பட்டி பகுதிகளில் காவல்துறையினர்  வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஜூலை 9 ஆம் தேதி காலை 6 மணியளவில், தீவட்டிப்பட்டி சோதனைச் சாவடியில் வழக்கம்போல் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரு புறவழிச்சாலையில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் வந்தது.     

 

அந்த காரின் உள்ளே ஒரு பெண், சிறுவன் உள்பட நான்கு பேர் இருந்தனர். அவர்கள், பெங்களூருவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு சேலம் வழியாகத் திருச்சிக்குச் செல்வதாகக் கூறினர். பார்ப்பதற்கு ஒரு குடும்பம் போல  தெரிந்ததால், சோதனை எதுவும் செய்யாமல் விசாரித்துவிட்டு மட்டும் காரை செல்ல அனுமதித்தனர். இதையடுத்து கார் அங்கிருந்து வேகமாகக் கிளம்பியது. அப்போது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஞானசேகரன், காரின் பின்பகுதியில் சின்னச் சின்னதாக நிறைய சாக்குப் பைகள் இருந்ததைப் பார்த்துவிட்டார். அந்த காரை சோதனையிட வேண்டும் என அவர் உத்தரவிட்டார். அதற்குள் கார் சிறிது தூரம் சென்றுவிட்டதால், காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் துரத்திச்சென்று காரை மடக்கினர். காருக்குள் சோதனை செய்தனர்.     

 

சந்தேகத்துக்குரிய சாக்குப் பைகளை அவிழ்த்துப் பார்த்தபோது, அவற்றில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. 20 சாக்குப் பைகளில் 80 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தன. அவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் பெங்களூருவில் போதைப் பொருள்களை வாங்கிச்சென்று திருச்சியில் ரகசியமாக விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காரில் வந்த நான்கு பேரையும் பிடித்து விசாரித்தனர்.    

 

திருச்சி மாவட்டம் பாலக்கரை என்.எம். தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் (45), அவருடைய தம்பி அப்துல் அஜிஸ் (43), முகமது யூசுப்பின் மகனான 17 வயது சிறுவன், அவர்களுடைய உறவினர் பாலக்கரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த யாஸ்மின் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் நீண்ட காலமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல பெங்களூருவுக்குச் சென்று புகையிலைப் பொருள்களை வாங்கிச் சென்று  உள்ளூரில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து 17 வயது சிறுவனைத் தவிர மற்ற மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்