Skip to main content

'டாஸ்மாக்' திறப்புக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

TASMAC SHOPS REOPENING TN GOVT BJP LEADERS


பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் இன்று (12/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்ற நிலையில், பல்வேறு தொழில்கள் முழுமையாகத் தொடங்கப்படாமல் இருக்கின்றன. மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் போதிய வருவாய் இன்றி கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 

இத்தகைய நிலையில் ஊரடங்கு தளர்வு என்று கூறி திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேதனைக்குரியது. இதற்கு முந்தைய ஆட்சியில் கரோனா ஊரடங்கின் போது கருப்புச்சட்டை அணிந்து 'டாஸ்மாக்' கடைகளைத் திறக்கக்கூடாது என்று வீடுகளின் முன்பு போராட்டம் நடத்திய இன்றைய முதல்வர் ஸ்டாலின் இப்போது ஊரடங்கு காலத்தில் 'டாஸ்மாக்' கடைகளைத் திறப்பது அதிர்ச்சி அளிக்கிறது, வேடிக்கையாகவும் இருக்கிறது. 

 

எனவே ஊரடங்கு காலத்தில் 'டாஸ்மாக்' கடைகளை திறக்கக்கூடாது என்றும் மேலும் 'டாஸ்மாக்' கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை (13/06/2021) காலை 10.00 மணிக்கு பா.ஜ.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் நாளை (13/06/2021) காலை 10.00 மணிக்கு கமலாலயத்தின் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்கிறார். மற்ற பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் அவரவர்கள் வீடுகளுக்கு முன்பாகவும், அவர்கள் வீடுகள் அமைந்துள்ள பூத்துகளில் ஒன்று கூடியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பூத்துகளிலும் தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலன் கருதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்