Skip to main content

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

tamilnadu nagapattinam fisherman finger cut incident in bay of bengal sea 

 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி ஐந்து லட்சம் மதிப்புள்ள மீன் மற்றும் வலைகளை பறித்துக் கொண்டதோடு மீனவர்களின் விரல்களை துண்டாடிய கொடூரம் மீனவ மக்களை பதற வைத்துள்ளது.

 

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 6 மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது.

 

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 14 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, சந்துரு, மாதேஷ், சிவபாலன், ஆகாஷ் ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, நான்கு படகுகளில் அதிவேகமாக வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் பாய்ந்து அவர்களை கூர்மையான கத்தியால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இலங்கை கடற்கொள்ளையர்களின் கொலைவெறித் தாக்குதலில் தமிழக மீனவர் முருகனின் இடது கையின் மூன்று விரல்கள் வெட்டப்பட்டது. பட்டாக்கத்தி, இரும்பு கம்பிகள், கட்டைகள் கொண்டு படகில் இருந்த மற்ற மீனவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

tamilnadu nagapattinam fisherman finger cut incident in bay of bengal sea 

 

அதனைத் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களின் உதவியோடு, புஷ்பவனம் கடற்கரைக்கு காயம்பட்ட மீனவருடன் கரை வந்து சேர்ந்த சக மீனவர்கள், அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்களின் நிலையைக் கண்டு மருத்துவமனையில் நள்ளிரவில் குவிந்திருந்த மீனவ பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் வெட்டப்பட்ட மீனவர் முருகனை நாகையில் இருந்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ள நாகை மீனவர்கள், பலத்த ஆயுதங்களுடன் கத்தி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், எதிர்த்து பேசினாலே கடுமையாகத் தாக்கினார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளனர். மீனவரின் விரல்களை துண்டாடி இந்திய எல்லையில் அத்துமீறி புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்