இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரைக் கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இந்த விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வாங்குவதைத் தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இரு பள்ளி ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்” என தெரிவித்துள்ளார்.