தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தினமும் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்களைத் தொடர்ந்து நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் டெங்கு பரவலை அடுத்து தமிழகத்தில் உள்ள கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் எனப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதித்தவர்கள் யாரேனும் உள்ளார்களா என்று கண்டறியவும் பொது சுகாதாரத்துறை மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. கொசு புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குழுவும் குறைந்தது 2 முதல் 3 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.